வடசென்னையில் பிரபல கம்பெனி பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: வடசென்னையில் 3 இடங்களில் பிரபல கம்பெனி பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களிடம் இருந்த ஒன்றரை டன்னுக்கு மேற்பட்ட போலி பெருங்காய தூள் பறிமுதல் செய்யப்பட்டன. வடசென்னை பகுதியில் பிரபல பெருங்காய கம்பெனி பெயரில் போலியாக பெருங்காயம் தயாரிப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் 2 நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜா தலைமையில் ஒரே நேரத்தில் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் மூன்று இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் கொருக்குப்பேட்டை தங்கவேல் தெருவில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பெமிலா ஷெர்லி மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது சுமதி (56) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து பிரபல எல்ஜி பெருங்காய கம்பெனி பெயரில் போலியாக தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அதன் பேரில் அங்கிருந்து மூன்று பிரிண்டிங் மிஷின் ஒரு மிக்சி, ஒரு ஜார், காலி டப்பா மூன்று மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், வண்ணாரப்பேட்டை எம்சிஎம் கார்டன் 3வது தெருவில் போலி பெருங்காயம் தயாரிப்பதாக வந்த தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமேகலை மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது செல்வராஜ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து போலி பெருங்காயம் தயாரிப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் செல்வராஜை கைது செய்து அங்கிருந்து 5 பெட்டி பெருங்காயம், 4 மூட்டை காலி டப்பா, 6 லிட்டர் எண்ணெய், பெருங்காய பொடி 5 மூட்டை, சீல் வைக்க பயன்படுத்திய மிஷின் போன்வற்றை பறிமுதல் செய்தனர்.

 

கொருக்குப்பேட்டை அண்ணாநகர் கோ.சு.மணி தெருவில் சோதனை செய்தபோது அங்கு ஒரு வீட்டில் போலி பெருங்காயம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து காலி டப்பா, பெருங்காய தூள், அட்டை பெட்டி, மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று இடங்களிலும் மொத்தம் ஒன்றரை டன்னுக்கும் மேற்பட்ட போலி பெருங்காய தூள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: