×

பொங்கல் பண்டிகைக்கு பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்: புத்தாடை, சீர்வரிசை பொருட்கள் விற்பனை களைகட்டியது

சென்னை: பொங்கல் பண்டிகை தமிழ் மாதங்களில் ஒன்றான தை மாதம் தமிழக மக்களின் சிறப்புக்குரிய மாதம். அதோடு தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் முன்னோர்களால் கூறப்படுவது உண்டு. இத்தகைய தை மாத பிறப்பை பொங்கல் திருநாளாக தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழகிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு பொங்கலிட்டு மகிழ்வார்கள். அத்தகைய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதே நேரத்தில் நேற்று வார விடுமுறை தினம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க காலை முதல் கடை வீதிகளில் மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால், தமிழகம் முழுவதும் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் வெயிலை பார்க்க முடியவில்லை. வானம் மேகமூட்டத்துடன், மழை பெய்வதற்கான அறிகுறியுடன் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முக்கிய வணிக பகுதிகளான தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்தவர்கள், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட  பொருட்களை வாங்க சென்னையில் குவிய தொடங்கினர். குறிப்பாக தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. மக்கள் வெள்ளத்தால் தெருக்களை கடக்கவே அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடைகளில் பொங்கல் பண்டிகைக்கான புத்தாடைகள், வேட்டி, சட்டை, பேன்ட் சர்ட், டீ சர்ட் உள்ளிட்ட துணிமணிகளை வாங்கினர். இதனால், பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம், வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பொங்கல் பண்டி்கைக்காக புது டிசைன்களில் துணிகள் வரத்து அதிகமாக இருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், அணிகலன்கள்  போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியது.அது மட்டுமல்லாமல், சீர்வரிசை பொருட்கள் வாங்க வந்தவர்களின் கூட்டம் பஜார் வீதிகளில் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கும் கரும்பு, மார்க்கெட் பகுதிகளுக்கு வந்து குவிய தொடங்கியுள்ளது. இதன் விற்பனையும் வரும் நாட்களில் விறுவிறுப்படைய வாய்ப்புள்ளது.


Tags : Pongal festival ,Puthadai , Crowds of people thronged the streets to buy goods for Pongal festival: New Year's Eve, sale of goods in a row.
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா