கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு

காரைக்குடி: செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று காரைக்குடி திரும்பிய பிரனேசுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்த பதினோறாம் வகுப்பு மாணவர் பிரனேஷ் (16). இவர் சுவீடனில் நடந்த ரில்டன் கப் செஸ் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். கூடவே  இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28வது கிராண்ட் மாஸ்டர் ஆவார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேஷை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் நேரில் அழைத்து பாராட்டினர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று வந்த பிரனேஷை, அவர் படிக்கும் பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பள்ளி தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமதுமீரா, பள்ளி தலைமையாசிரியர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் வரவேற்றனர்.

முன்னதாக சக மாணவர்கள் அவரை தோளில் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் கூறுகையில், ‘‘எனது தந்தை முனிரத்தினம், தாய் மஞ்சுளா, சகோதரர் தினேஷ்ராஜன் மற்றும்  பள்ளி நிர்வாகம் கொடுத்த ஊக்கத்தின் காரணமாகவே இந்த பட்டத்தை பெற முடிந்தது. பட்டம் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2,600 புள்ளிகள் பெற்று சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வேண்டும். எனது பயிற்சியாளர்கள் அதுலன், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: