×

உத்தரகாண்டில் புதையும் நகரம் பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை: 600ல் 60 குடும்பம் வெளியேற்றம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தின் பாதிப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து, 600 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் திடீரென பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. பூமியிலும், கட்டிடங்களும் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு, சில கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்து மண்ணில் புதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கடந்த 15 நாட்களாக இந்த விரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளதால், அந்நகரில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் நேற்று முன்தினம் ஜோஷிமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், கேபினட் செயலாளர்கள், தேசிய பேரிடம் மீட்டு படை உயர் அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில், ஜோஷிமத் நகர நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மீ ட்பு பணிகள் குறித்தும், அதற்கு தேவையான உதவிகள் குறித்தும் ஒன்றிய அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதுவரை 60 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எஞ்சிய குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்படும் நிலையற்ற மண்டலாக ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரிநாத் கோயில், ஹேமகுந்த் சாஹிப் போன்ற இந்து, சீக்கிய புனித தலங்களுக்கு ஜோஷிமத் நகரத்தின் வழியாகவே செல்ல வேண்டும் என்பதால் புனிதமான இந்நகரை காப்பாற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கை எடுக்க முதல்வர் புஷ்கர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

* வளர்ச்சி பணிகளே காரணம்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோகித் தந்திரியால் தாக்கல் செய்த மனுவில், ‘உத்தரகாண்ட்டில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ரூ.12,000 கோடியில் சார்தாம் (கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) சாலை இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியது. இதே போல, எரிசக்தி துறை ரூ.2,976 கோடியில் நீர் மின் நிலையப்பணியை மேற்கொண்டது.

இதுபோன்ற பணிகள்தான் ஜோஷிமத் நகரம் புதைய காரணமாக அமைந்துள்ளது. இவை உத்தரகாண்ட் மக்களின் அடிப்படை உரிமை மீறல், எனவே இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து விசாரிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Tags : Uttarakhand ,PM Office , Burying town in Uttarakhand PM Office Emergency advisory: 60 out of 600 families evacuate
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்