×

பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வரும் ‘புதுச்சேரியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கோலப்போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்டு மக்களை மட்டுமல்ல புதுச்சேரி மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இது.

தாய்மார்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்வது மட்டும் போதாது. அவர்களுக்கான அதிகாரத்தை கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் மகளிர் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை அழைத்து பேசலாம். அரசியல் மட்டுமல்லாமல் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வேலையை மகளிர் காங்கிரசார் செய்து வருகின்றனர். யாரையும் யாரும் தப்பாக பேசக்கூடாது.

ஏனாம் தொகுதி எம்எல்ஏ முதல்வரை பற்றி தவறாக பேசியதாக செய்தி வெளியானது. ஆனால், அந்த எம்எல்ஏ முதல்வரை பற்றி பேசவில்லை என்று கூறியுள்ளார். இதில் முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் தரக்குறைவாக யாரையும் பேசக்கூடாது. அப்படி யார் பேசனாலும் அது தவறுதான். இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Tags : Puducherry ,BJP ,Former chief minister ,Narayanasamy , Women's safety in Puducherry under BJP coalition rule: Former chief minister Narayanasamy alleges
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...