×

46வது சென்னை புத்தக காட்சி விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: புத்தகங்கள் வாங்க குவிந்த வாசகர்கள்

சென்னை: 46வது சென்னை புத்தக காட்சியில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் புத்தகம் வாங்க வாசகர்கள் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக காட்சி நடத்தப்படுகிறது. 46வது சென்னை புத்தக காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 6ம் தேதி தொடங்கிய புத்தக காட்சி 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்தியாவில் முதல் முறையாக தமிழக அரசு சார்பில் ஜன.16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக காட்சியும் நடைபெறவுள்ளது.

இதில் வெளிநாடுகளை சார்ந்த பல்வேறு பதிப்பகங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் தமிழ் படைப்புகள் உலகம் முழுவதும் சென்றடைய பெரும் வாய்ப்பாக அமையும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புத்தகங்கள் வாங்க அதிகளவில் மக்கள் புத்தக காட்சிக்கு படையெடுத்தனர்.
குறிப்பாக சிறுவர்கள், வாலிபர்கள், முதியோர் என பலரும் புத்தக காட்சிக்கு வருகை தந்தனர். மேலும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அதிக அளவில் வந்தனர். சிறுவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அரங்குகளில் உள்ள  புத்தகங்களை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் பங்கேற்க முடியாத தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள், புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளன.  
இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன்  பதிப்பகத்தின் புத்தக அரங்கு எப்-8 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் விற்பனை செய்யப்படும் கர்ணனின் கவசம், தலபுராணம், பேசும் சித்திரங்கள், மருதம்  மீட்போம், உங்களுக்கு நீங்களே டாக்டர், மகளிர்  மருத்துவம், உயிர் பாதை  உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம்  சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மிகம்  தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்ட வண்ணமயமான புத்தகங்களை வாசகர்கள் விரும்பி  வாங்கி செல்கின்றனர். தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் புத்தக காட்சிக்கு வருகை தர உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : 46th ,Chennai Book Fair Holiday Crowd , 46th Chennai Book Fair Holiday Crowd: Readers throng to buy books
× RELATED உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை...