×

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்

சென்னை: 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று கூடுகிறது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்குகிறது. ஆளுநர், ஆங்கிலத்தில் உரையை நிகழ்த்த உள்ளார். சுமார் ஒரு மணி நேரம் அவர் உரை வாசிப்பார்.

அதில், மக்கள் நலத்திட்டங்களின் நிலை அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள், தற்போது தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆளுநரின் உரையில் இடம் பெற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் ஆளுநர் தமிழ்நாட்டை பற்றியும், புதிய கல்வி கொள்கை பற்றியும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு இந்த கூட்டத்தொடரில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் உரை நிகழ்த்திய பின்னர், அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி,  எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் அருகருகே இருக்கைகள் அமைந்துள்ளது. தற்போது இபிஎஸ், ஓபிஎஸ்  தனித்தனி அணியாக செயல்பட்டு வருவதால், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை  தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி அணியினர் சபாநாயகரிடம் ஏற்கனவே  கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு சபாநாயகர் தரப்பில் குறிப்புரைகளின்படி, சட்டமன்றத்தில் செயல்பட வேண்டும் எனவும், எதிக்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடித்து வருவதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனை காரணமாக கொண்டு கூட்டத்தொடரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேபோல், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சர் என்ற அந்தஸ்துடன் சட்டப்பேரவைக்குள்  நுழைய உள்ளார். அவருக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும்,  சட்டத்துறை  அமைச்சர் ரகுபதிக்கும் இடையே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட உள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர், தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதன் பின்னர், நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவிற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அன்றைய தினம் முழுவதும் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல், இந்த கூட்டத்தொடரில் சில சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இறுதி நாள் கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் பேச்சுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். அத்துடன் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.


Tags : Governor ,R. ,N.N. ,ravi , Legislature meets today with Governor RN Ravi's speech: New schemes to be announced
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...