×

2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்; நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அரசின் முக்கிய அறிவிப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார்

சென்னை: 2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை  கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில், தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு கூடுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் கூறும்போது, ‘2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.

முதல் நாள் கூட்டத்தில் தமிழக கவர்னர் உரை நிகழ்த்த இசைவு தெரிவித்துள்ளார். கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடிந்ததும், நான் (சபாநாயகர்) உரையை தமிழில் படிக்க இருக்கிறேன். இதையடுத்து அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் அன்றைய தினம் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், கவர்னர் உரையுடன் 9ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்படும்’ என்றார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேரவையில் ஆற்ற இருக்கும் 2வது உரை இதுவாகும். சட்டப்பேரவையில் கவர்னர் படிக்கும் உரையை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கவர்னர் உரையில் தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் பற்றியும் கவர்னர் உரையில் இடம் பெற்றிருக்கும். அதேபோல், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பற்றியும், புதிய கல்வி கொள்கை பற்றியும் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதற்கு இந்த கூட்டத்தில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் உரையுடன் நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள், அதாவது 10ம் தேதி (செவ்வாய்) வழக்கம்போல் காலை 10 மணிக்கு பேரவை கூட வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள்.

இதையடுத்து அன்றைய தினம் முழுவதும் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். மீண்டும் 11ம் தேதி பேரவை கூடும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை முடிக்க வேண்டும் என்பதால், 12ம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் சில சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இறுதிநாள் கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் பேச்சுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். அத்துடன் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் அருகருகே இருக்கைகள் அமைந்துள்ளது. தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருவதால், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி அணியினர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி சபாநாயகர் அப்பாவு கூறும்போது, ‘இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே அவர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம். குறிப்புரைகளின்படி, சட்டமன்றத்திலும் செயல்பட வேண்டும். தற்போது வரை ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் நீடித்து வருகிறார்.

ஓபிஎஸ், இபிஎஸ் உடன் கட்சி ரீதியாக பிரச்னை இருந்தால் அதனை அவர்களுக்குள்ளேயே பேசி முடித்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். அதனால் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திலும் இந்த பிரச்னையை எழுப்ப எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் குரல் எழுப்புவார்கள். இவர்களுக்கு ஆதாரத்துடன் பதில் அளிக்க ஆளும் திமுக கட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தயாராக உள்ளனர். சட்டப்பேரவையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கும் இடையே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா பரவல் இல்லை என்றாலும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக்குள் வரும் அனைத்து எம்எல்ஏக்களும் முகக்கவசம் அணிவது அவசியம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், நாளை முதல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Tags : Governor ,R.R. N.N. Ravi , 1st Session of 2023, Tamil Nadu Legislative Assembly, Government Important Announcement, Governor RN Ravi
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...