×

2-1 என தொடரை வென்றது இந்தியா பேட்டிங் எவ்வளவு எளிது என சூர்யாவின் அதிரடி காட்டுகிறது: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு

ராஜ்கோட்: இந்தியா -இலங்கை  கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வதுபோட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் இந்தியா  5விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் நாட் அவுட்டாக 51 பந்தில், 7பவுண்டரி,9 சிக்சருடன் 112ரன் விளாசினார்.  சுப்மான்கில் 46(36பந்து),ராகுல்திரிபாதி 35(16பந்து), அக்சர்பட்டேல் நாட் அவுட்டாக 9 பந்தில், 4பவுண்டரியுடன் 21 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இலங்கை 16.4ஓவரில் 137 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 91ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இலங்கை பேட்டிங்கில் அதிகபட்சமாகக குசால் மெண்டிஸ், கேப்டன் தசுன் ஷனகா தலா 23, தனஞ்செயா டிசில்வா 22ரன் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3, உம்ரான்மாலிக், சாஹல், ஹர்திக்பாண்டியா தலா 2விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி  மூலம் 2-1 என இந்தியா தொடரை கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதும், அக்சர் பட்டேல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன்  ஹார்திக் பாண்டியா அளித்த பேட்டி: ‘‘சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் புதுமையான ஷாட்களை ஆடி வியக்க வைக்கிறார். பேட்டிங் எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள் என்று அனைவருக்கும் சொல்வது போல் அமைந்திருக்கிறது. அவருக்கு நல்ல வேலை நான் பந்து வீசவில்லை. அப்படி நான் பவுலிங் செய்தால் அவர் அடிக்கும் வேகத்தை பார்த்து நான் நிச்சயம் மனம் உடைந்து போய் இருப்பேன். ராகுல் திரிபாதிக்கும் என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அவர் விளையாடிய போது பந்து நன்றாக ஸ்விங் ஆனது. ஆனால் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதன் பிறகு சூர்யகுமார் மேஜிக் செய்தார். அவரிடம் நாம் எந்த அறிவுரையையும் கூற தேவையில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடுகிறார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அக்சர் படேல் லொயர் மிடில் வரிசையில் களமிறங்கி, குறைந்த பந்துகளில் ரன்களை குவிக்கிறார். அணிக்கு இது மிகமிக உதவிக்கரமாக இருக்கிறது. கேப்டனாக எனது பொறுப்பு, அனைத்து வீரர்கள் மீதும் முழு நம்பிக்கை வைப்பதுதான். ஒருபோட்டியில் சொதப்பிவிட்டார் என்பதற்காக ஒதுக்க முடியாது. இதனை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். 2வது ஆட்டத்தில் நாங்கள் எங்களுடைய 50 சதவீத ஆட்டத்தை கூட வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று நாங்கள் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். இது மகிழ்ச்சியை அளிக்கிறது ” என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது: இங்கு வருவதற்கு முன்பு, நான் சிறந்த ஃபார்மில் இல்லை, ஆனால் இந்த தொடரின் தொடக்கத்திலிருந்தே நான் நல்ல ஃபார்மில் இருந்தேன். எனது சொந்த ஆட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இளம்வீரர்கள்  விளையாடிய விதம், நிறைய சாதகமாக இருந்தது. வீரர்கள் மிகவும் மேம்பட்டுள்ளனர். அவர்கள் நன்றாக விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடருக்கு வரும்போது எனக்கு கையில் காயம் ஏற்பட்டது, அதனால் நான் போதுமான அளவு பந்து வீசவில்லை. ஒருநாள் போட்டிகளில் அதிகமாக பந்துவீசுவேன் என்று நம்புகிறேன்.இந்திய அணிக்கு வாழ்த்துகள், குறிப்பாக சூர்யா நன்றாக ஆடினார், என்றார். அடுத்ததாக இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. இதில் முதல்போட்டி நாளை மறுநாள் கவுகாத்தியில் நடக்கிறது.

கேப்டன் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார்
தொடர் நாயகன் அக்சர் படேல் கூறியதாவது:
 நான் எனது பேட்டிங்கை ரசிக்கிறேன், பேட்டிங்கால் அணிபலனடையும் போது  மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த தொடருக்காக வித்தியாசமாக எதையும் செய்யவில்லை, கேப்டன் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார், என்னை சுதந்திரமாக விளையாடசெய்தார். குழு கூட்டங்களின் போது நாங்கள் நிறைய திட்டமிடுகிறோம், ஆனால் சில நேரங்களில் விஷயங்கள் தவறாகிவிடும், நான் எனது திட்டங்களை சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறேன். எல்லா நேரங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

எனது பேட்டிங்கில் கடின உழைப்பு உள்ளது
ஆட்டநாயகன்  விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: நீங்கள் விளையாட்டுக்குத் தயாராகும் போது உங்கள் மீது அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக விளையாட முடியும். இதில் நிறைய கடின உழைப்பு உள்ளது, சில தரமான பயிற்சி அமர்வுகளும் இதில் அடங்கும். பின்னால் உள்ள பவுண்டரி எல்லை 50-60 மீட்டர் தான்., அதனால்  நான் அங்கு குறிவைத்தேன். முன்பே தீர்மானிக்கப்பட்ட சில ஷாட்கள் உள்ளன, ஆனால் நீங்கள் மற்ற ஷாட்களையும் வைத்திருக்க வேண்டும், இதனால் பந்து வீச்சாளர் திட்டத்தை மாற்றினால், நீங்கள் ஒரு பதிலைப் பெறலாம். டிராவிட் என்னை ரசித்து ஆட ஊக்கப்படுத்துகிறார். என்னை ரசிக்க வைக்கிறார். ரசித்து வெளிப்படுத்துங்கள் என்று சொல்கிறார்என்றார்.

Tags : Surya ,India ,Hardik Pandia , India batting, Suriya in action, Captain Hardik Pandya
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்