×

ரூ.1,000 கோடி மோசடி புகாரில் சீல் வைத்த கடையில் பொருட்கள் திருட்டு: 3 குடோன்களில் பதுக்கியவர்களுக்கு வலை

வந்தவாசி: வந்தவாசியில் பொங்கல், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரில் ‘சீல்’ வைத்த கடையில் இருந்த பொருட்களை திருடி 3 குடோன்களில் பதுக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இந்த சூப்பர் மார்க்கெட்டின் கிளை இயங்கி வந்தது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதன்படி தீபாவளி சீட்டு செலுத்தியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், பட்டாசுகள், இனிப்புகளும், மற்றொரு திட்டத்தின்படி பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்துவோருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க காயின் மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்து கடந்த 4 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால், கூறியபடி பரிசுப்பொருட்கள் வழங்கப்படவில்லை.

வந்தவாசி, செய்யாறில் இந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் சார்பில் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார்கள் வந்தன. இதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த சூப்பர் மார்க்கெட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து அந்த கட்டிடத்திற்கு வருவாய்த்துறை மூலம் போலீசார் சீல் வைத்தனர். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட கடையின் பின்புற கதவை உடைத்து சிலர் பொருட்கள் கொண்டு செல்வதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சீல் வைத்த கடையில் இருந்த பொருட்களை எடுத்து அங்குள்ள 3 குடோன்களில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 குடோன்களில் இருந்த அனைத்து பொருட்களையும் வருவாய்த்துறையினர் மூலம் சூப்பர் மார்க்கெட்டுக்கு மீண்டும் கொண்டுவந்தனர். மேலும், குடோன்களில் பொருட்களை பதுக்கிய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Rs 1,000 crore fraud, theft of goods from a sealed store, 3 Gudon
× RELATED 3-ம் கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்ற...