பாஜகவில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது; அண்ணாமலை துணிச்சலான தலைவர்.! பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேட்டி

சென்னை: ஒரு சிலர் கட்சியை விட்டு போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது எனவும், பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது எனவும் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்ன நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்து இருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என  பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது.

பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன். தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தான் உள்ளேன். இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

Related Stories: