×

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா: புதிய அமைச்சரானார் பல்பீர் சிங்

சண்டிகர்: பஞ்சாபில் முறைகேடு தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய  அமைச்சர் பவுஜா சராரி நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பவுஜா சராரி, தனது நெருங்கிய நண்பருடன், சில ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து விவாதித்த ஆடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆடியோ வெளியாகி 4 மாதங்கள் ஆன நிலையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய   அமைச்சர் பவுஜா சராரி நேற்று திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து ஆம் ஆத்மியின் பஞ்சாப் செய்தி தொடர்பாளர் மால்விந்தர் சிங் கூறுகையில், ‘சொந்த காரணங்களுக்காக பவுஜா சராரி ராஜினாமா செய்துள்ளார்” என்றார். இதற்கிடையே பட்டியாலா எம்எல்ஏ டாக்டர் பல்பீர் சிங் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய அமைச்சர் பல்பிர் சிங்குக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பக்வந்த் மான் இதில் கலந்து கொண்டார்.


Tags : Punjab ,minister ,Balbir Singh , Punjab minister resigns over corruption allegations: Balbir Singh becomes new minister
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து