×

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டிஎஸ்பி மற்றும் விஏஓ மீது நடவடிக்கை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த அப்போனியன் ராஜ் என்பவர், தனது மனைவி மோட்ஷா ஆனந்த மேரி என்பவரை குடி போதையில் சுவற்றில் தலையை மோதியும், வயிற்றில் தாக்கியும் கொலை செய்ததாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  கடந்த 2017ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பரூக், வழக்கில் சாட்சியங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்ததில் மனைவி மோட்ஷா ஆனந்த மேரியை கொலை செய்ய அப்போனியன் ராஜ், எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து  மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் இருந்து, குடிபோதையில் ஏற்பட்ட  தகராறில் மனைவியை தாக்கியுள்ளார் என்பதும், திட்டமிட்டு கொலை செய்யவில்லை தெளிவாகிறது. எனவே, கொலை செய்யும் உள்நோக்கமின்றி மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் அப்போனியன் ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். மேலும், கண்பார்வைக் குறையுடன் உள்ள மேரியின் மகனுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, அரசுத்தரப்பு சாட்சியான நெற்குன்றம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய ஜனார்த்தனன் அளித்த வாக்குமூலத்தில், காவல் நிலையத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று, அதை தனது அலுவலகத்தில் பெற்றதாக காவல் துறைக்கு அறிக்கை அளித்ததாகக் கூறியுள்ளார். புலன் விசாரணை அதிகாரி  கேட்டுக் கொண்டதால் அதுபோல் அறிக்கை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொய் சாட்சியம் தயாரித்ததாக வழக்கை புலன் விசாரணை செய்த தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக உள்ள அழகு மற்றும் தற்போது மதுரவாயல் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ஜனார்த்தனன் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : DSP ,VAO ,Madras , Action against DSP and VAO for producing false witness in murder case: Madras women's court verdict
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி