×

ரேஷன் கடைகளில் விரைவில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம், 80 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பரிசு தொகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். கிடைக்கப் பெறாதவர்கள் 13ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிந்துரை செய்யப்படும். கடந்த ஆட்சியில் துண்டு கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு முழு கரும்பு வழங்க உள்ளது. வயல்வெளி மற்றும் கூலி வேலை செய்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான கருவிகள் வாங்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.


Tags : iris ,Minister ,Chirabani , Ration shops to soon distribute goods through Ukzhili registration: Minister Chakrapani informs
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி