×

திருமங்கலம் அருகே விவசாயம் செழிக்க வேண்டுதல் ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் அறுசுவை அசைவ அன்னதானம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவுத்திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கரடிக்கல் ஊராட்சிக்குட்பட்ட, அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையாசாமி கோயில் உள்ளது.  இக்கோயிலில் கோபுரம், சாமி சிலைகள் கிடையாது. இங்குள்ள பாறையையே சாமியாக மக்கள் வணங்குகின்றனர். இக்கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி மார்கழி பவுர்ணமி தினத்திற்கு மறுநாள் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலில் சக்திகிடாய் சாமிக்கு பலியிடப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 60க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு 1,500 கிலோ அரிசியில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு முத்தையா சுவாமிக்கு, அசைவ உணவு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் கோயில் திறந்தவெளி வளாகத்தில் பக்தர்களுக்கு சாதம், ஆட்டுக்கறி குழம்பு, கறிக்கூட்டு பரிமாறப்பட்டது.

விழாவில் திருமங்கலம்,, உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு அசைவ உணவு உண்டனர். காலை 8 மணிக்கு துவங்கிய அன்னதானம் மதியம் 1 மணி வரை தொடர்ந்தது.


Tags : Tirumangalam Men's Special Festival Non-Vegetarian Alms Offering , Praying for the prosperity of agriculture near Tirumangalam Men's Special Festival Non-Vegetarian Donation: 10,000 people participate
× RELATED ஊட்டியில் கொட்டித் தீர்த்த மழையால் களை கட்டிய குடை வியாபாரம்