×

ராஜ்கோட்டில் ‘ஸ்கை’ வாணவேடிக்கை; தொடரை வென்றது இந்தியா

ராஜ்கோட்: இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 91 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இஷான், கில் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். இஷான் 1 ரன்னில் வெளியேற, கில் - ராகுல் திரிபாதி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய திரிபாதி 16 பந்தில் 35 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து,  3வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த கில் - சூரியகுமார் இருவரும் இலங்கை பந்துவீச்சை பதம் பார்க்க, இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆக்ரோஷமாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ‘ஸ்கை’ சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியின் ருத்ரதாண்டவத்தில் இந்தியாவுக்கு 53 பந்தில் 111 ரன் கிடைத்தது.

மிஸ்டர் 360ன் இந்த மரண அடியால் நிலைகுலைந்த இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ஆறுதலாக கில் 46 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்திக், ஹூடா தலா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யாவுடன் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்சர் படேலும் தன் பங்குக்கு பவுண்டரிகளாக விளாசித் தள்ள இந்திய ஸ்கோர் 200 ரன்னை தாண்டி எகிறியது. இமாலய சிக்சர்களாகப் பறக்கவிட்டு மிரட்டிய சூர்யகுமார் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
சர்வதேச டி20ல் அவர் அடிக்கும் 3வது சதம் இது. 43 இன்னிங்சில் சூர்யா 14 அரை சதம் மற்றும் 3 சதம் விளாசியுள்ளார். மேலும், 1500 ரன் என்ற மைல்கல்லை  843 பந்தில் விரைவாக எட்டிய சாதனையும் ‘ஸ்கை’ வசமானது. இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. சூர்யகுமார் 112 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), அக்சர் 21 ரன்னுடன் (9 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி 16.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுத்து, 91 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஷனாகா, குஷால் மென்டிஸ் அதிகபட்சமாக தலா 23 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3, ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக், சாஹல் தலா 2, அக்‌ஷர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கவுகாத்தியில் நாளை மறுநாள் நடக்கிறது.

Tags : Rajkot ,India , 'Sky' fireworks in Rajkot; India won the series
× RELATED கோட்டையாக கருதப்படும் குஜராத்திலேயே...