சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு, கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் கல்லூரி முடிந்து, தனது சக கல்லூரி நண்பர்களுடன் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பல்லவன் மேம்பால சிக்னலில் இறங்கி உள்ளார். அப்போது அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் ‘பீர் பாட்டிலுடன் பச்சையப்பாஸ் காலேஜ் ஜே’ என்று கூச்சலிட்டு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த மாணவனை திடீரென வேறு கல்லூரி மாணவன் என கூறி மற்றொரு கல்லூரி மாணவனின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அந்த மாணவனை விடாமல் துரத்தி சென்ற கும்பல், சென்ட்ரல் ரயில் புறநகர் நிலையத்தில், கையில் வைத்திருந்த பீர்பாட்டில் மற்றும் சில ஆயுதங்களை தூக்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்க சென்றபோது நாலாபுறமும் சிதறி மெட்ரோ ரயில் நிலையம் வழியாக தப்பியோடி விட்டனர். இதில் 15 கல்லூரி மாணவர்களை மட்டும் போலீசார் பிடித்துள்ளனர். இதையடுத்து, சிக்கிய மாணவர்களிடம் போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: