×

ஏப்ரல் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் அமைக்கும் பணி ஏப்ரல் 30ம்தேதிக்குள் முடிக்கப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலை  துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் கட்டுமான பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2016 டிசம்பரில் ரூ.42 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இது, 535 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலத்துடன் கூடிய உயர்மட்ட  கால்வாய் மேம்பாலம். இந்த பணி 2018 டிசம்பர் 31ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் முடிவடையாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ், கார் மற்றும் பைக்குகள் பக்கிங்காம் கால்வாய் ஓரம் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றன.
தற்போது பாலத்தின் உயர்மட்ட மேல்தளம் அமைக்கப்பட்டு, சுமார் 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்ட நிலையில், பாலத்தின் இருபுறமும் இறங்கு பாதைகள் மற்றும் சர்வீஸ் சாலைகள், மின் விளக்குகள் போன்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இதனால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, குடிநீர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, பக்கிங்காம் கால்வாய் ஓரம் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை சந்தித்து இந்த கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி, மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து பல மாதங்களாக கிடப்பில் கிடந்த உயர்மட்ட மேம்பால பணி நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதித்தது. தற்போது, கால்வாய் உயர்மட்ட மேம்பால பணி தொடர்ச்சியாக நடந்து, வருகிற ஏப்ரல் 30ம்தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்” என்றார்.

Tags : Tiruvottiyur ,Buckingham Canal , Tiruvottiyur Buckingham Canal flyover to be opened soon after work is completed by April 30: Highways officials assure
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...