46வது சென்னை புத்தக காட்சி; புத்தக ஆர்வலர்களின் கூட்டம் அலைமோதியது: வாசகர்களை கவரும் சூரியன் பதிப்பகம்

சென்னை: 46வது சென்னை புத்தக காட்சியில் புத்தக பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் புத்தக காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46வது சென்னை புத்தக காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதை வழங்கினார். கடந்த ஆண்டும் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தக பிரியர்களின் அதிகப்படியான வருகையையொட்டி இந்தாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் உள்ளன.

சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்குகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளன. புத்தக காட்சி தொடக்கம் முதலே பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி நாளான நேற்று ஏராளமான வாசகர்கள் புத்தக காட்சிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.  இதில் எஃப் 8 என்ற எண்ணில் அமைக்கப்பட்டுள்ள தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு பல வாசகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

குறிப்பாக இங்கு விற்பனை செய்யப்படும் பேசும் சித்திரங்கள், மருதம் மீட்போம், உங்களுக்கு நீங்களே டாக்டர், உயிர் பாதை, கர்ணனின் கவசம், மகளிர் மருத்துவம், தல புராணம் உள்ளிட்ட புத்தகங்கள் மக்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளன. இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்களை வாசகர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதேபோல், சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படாமல், புத்தகங்கள் வாங்கி வைக்கப்படுகின்றன.

அதாவது ‘‘புத்தக தானம்’’ என்ற பெயரில் சிறைத்துறை சார்பாக அமைக்கப்பட்டு புத்தக வாசகர்களிடமிருந்து தானமாக புத்தகங்கள் பெறப்படுகின்றன. இந்த புத்தக காட்சி ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை  பொதுமக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி வரை  நடைபெற உள்ள இந்த புத்தக காட்சியில் லட்சகணக்கான புத்தகங்கள் விற்பனையாகும் என புத்தக விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பொதுமக்கள் புத்தக காட்சிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி செல்வார்கள் என விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: