சென்னையில் இன்னும் 8 நாட்களுக்கு இரவில் குளிர் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்னும் 8 நாட்களுக்கு இரவில் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த  2 தினங்களாக  சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு  எந்த அளவிற்கு குளிர் நிலவுகிறது என்றால், குளிரினால் மாரடைப்பு , ரத்த அழுத்தம் அதிகரிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.  

இந்த நிலையில் சென்னையில் ஜனவரி பாதி வரை அதாவது 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஜனவரி மாதத்தின் மத்தியில்  இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகர தொடங்கும் என்றும், இது இரவு வெப்ப நிலையை குறைக்கலாம். அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழையை எதிர் பார்க்கலாம் என்றும் அதன் பிறகு வறண்ட வானிலை இருக்கலாம்  எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: