பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி சாவு: கேரளாவில் 7 நாளில் 2 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்ததார். இதையடுத்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஏராளமான ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் பிரியாணி சாப்பிட்டு மேலும் ஒரு கல்லூரி மாணவி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள உதுமா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுபார்வதி (21). இவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆன்லைன் மூலம் குழிமந்தி பிரியாணி வாங்கினார்.

வீட்டில் உள்ள அனைவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். மறுநாள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காசர்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அஞ்சு பார்வதியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மேல்பரம்பு போலீசில் புகார் செய்தனர். அஞ்சுபார்வதியின் உடல் இன்று மங்களூருவிலிருந்து காசர்கோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.  இதற்கிடையே குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு மேலும் ஒருவர் இறந்ததை தொடர்ந்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அஞ்சு பார்வதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: