காஞ்சிபுரம்: நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது என காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர் தலைமை தாங்கினார். ஆறுமுக நாயனார், முத்துக்குமார், நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ.8 லட்சம் நிதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. கட்சி சார்பில் ஏற்கனவே அழுத்தமாக சொல்லி இருக்கிறோம், வளர்ச்சி என்ற பெயரில் ஒன்றிய அரசு, தமிழகத்தில் கொண்டுவரும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டு கொள்கிறோம். வளர்ச்சி நாட்டிற்கு அவசியம்தான், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து, விவசாயிகளுடைய உரிமையை காவு கொடுத்து திட்டம் கொண்டு வருவது உண்மையான வளர்ச்சியாக இருக்காது.
சட்டவிதிகளுக்குட்பட்டு பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர விதிமீறி செய்ய வேண்டாம். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை பெரிய தொழிலதிபர்களிடம் விலைபேசி விற்கிற காரியம்தான் நடக்கிறது. பரந்தூர் விமான நிலையம்கூட அம்பானியிடம் போனால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அம்பானியின் ஏஜென்டாக அரசு நிர்வாகம் மாறக்கூடாது, என்பதுதான் எங்களுடைய கருத்து. நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையம் தேவை. அதற்காக வளர்ச்சி என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தனிப்பட்ட கார்ப்பரேட்களுக்கு நிலத்தை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.