மன்னார்குடி : மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற வழக்கில் 4 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அடுத்த முத்துப்பேட்டை சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. கடந்த 4ம் தேதி நள்ளிரவில் வந்த 4 மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு கேமராக்களை முதலில் உடைத்தனர். பின்னர், கடையின் பூட்டு மற்றும் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் சூபர்வைசர் தியாகராஜன் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, எஸ்ஐக்கள் முருகன், சந்திரகாசன், குற்றப்பிரிவு எஸ்எஸ்ஐ சதாசிவம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மீதமிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நான்கு மர்ம நபர்களை டவுன் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூர்-கர்ணாவூர் சாலையில் ஒரு இடத்தில் மர்மநபர்கள் பதுங்கி இருப்பதாக மன்னார்குடி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா எஸ்ஐ சந்திரகாசன், குற்றப் பிரிவு எஸ்எஸ்ஐ சதாசிவம், முதுநிலை காவலர்கள் பழனி, துரை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த நான்கு வாலிபர்களை மடக்கிப் பிடித்து மன்னார்குடி நகர காவல் நிலை யத்திற்கு கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பிடிபட்ட நபர்கள் மன்னார்குடி அடுத்த பாமணி உள்ளூர் வட்டம் காளிதாஸ் (23), பிரவீன் (22), மற்றொரு பிரவீன் (23), திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (20) என்பதும், இவர்கள் நால்வரும் சேர்ந்து முத்துப்பேட்டை சாலை டாஸ்மாக் கடையில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேர்களையும் கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் கிளை சிறையில் நான்குபேரையும் அடைத்தனர்.டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்களை விரைந்து கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா உள்ளிட்ட போலீசாரை எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டினார்.
