×

நீர்வரத்து கால்வாய்கள் ஆக்ரமிப்பு அழிவின் விளிம்பில் அண்ணா குளம்-இறச்சகுளம் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

பூதப்பாண்டி : நீர்வரத்து  கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டதால் இறச்சகுளம் ஊராட்சி, அருள்ஞானபுரத்தில்   உள்ள அண்ணா குளம்  அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது.
கன்னியாகுமரி  மாவட்டத்தில் பராமரிப்பின்றி, குடிமராமத்து பணிகள் செம்மையாக நடைபெறாமல்  நீர் நிலைகள் 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால்   நீர்நிலைகளை நம்பி இருந்த நஞ்சை நிலங்கள் நீர்வரத்து சரிவர  இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள்  வீட்டு  மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஆறு, குளங்கள்  தூர்வாரி குடிமராமத்து பணிகள் வருடம் தோறும் செய்தால் மட்டுமே நீர்நிலைகள்  காப்பாற்றப்படும். நீர்நிலைகள் காப்பாற்றப்பட்டால் மட்டுமே விவசாயம்  காப்பாற்றப்படும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம்  பாதுகாக்கப்படும். குமரிமாவட்டத்தில் தற்போது நீர்நிலைகள்  கொஞ்சம்  கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் சம்பவம் மறைமுகமாக நடந்தேறி வருகிறது. இதனால்  விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.  அருள்ஞானபுரம்  பகுதியில் உள்ள அண்ணா குளம் சுமார் 300 வருடம் பழமையானது.

இந்த குளம்  தூர்வாரப்படாததால் அதன் நீர் வரத்து பகுதிகள் முழுவதும்  ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. 7 அடி அகலம் இருந்த நீர்வரத்து கால்வாய்கள் தற்போது  ஒரு அடியாக குறைந்துள்ளது. இதனால் குளத்திற்கு போதிய தண்ணீர் வருவதில்லை.  அண்ணாகுளத்தை சுற்று வட்டாரத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  தினமும் பயன்படுத்தி வந்தனர்.  தற்போது  இந்த குளம் புதர் மண்டி,  ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து, கோரை புற்கள் முளைத்து முற்றிலுமாக மக்கள்  பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும்  குளத்தை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.அண்ணா  குளத்தில் நீர் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர் உயர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில்  நீர் தட்டுப்பாடு ஏற்படாமல்  தடுக்க முடியும். மக்கள் தினமும் குளிப்பதற்காக பயன்படுத்த முடியும்.  எனவே  அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அண்ணாக்குளத்தை தூர்வாரி அழிவின்  விளிம்பிலிருந்து காப்பாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Anna Kulam-Irachakulam Panchayat , Bhootapandi: The destruction of the Anna pond in Aruljnanapuram, Irachakulam Panchayat due to encroachment of water channels.
× RELATED சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13...