×

30 ஆண்டாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு அஸ்தினாபுரத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய பேருந்து நிலைய பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

தாம்பரம்: அஸ்தினாபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டு, அந்த இடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, பல்லாவரம், குன்றத்தூர், கிண்டி, தி.நகர், பிராட்வே, சேலையூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர் என பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

இந்நிலையில், தற்போதைய பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, கடந்த 2006ம் ஆண்டு பல்லாவரம் நகராட்சியாக இருந்தபோது, நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அஸ்தினாபுரம் பேருந்து நிலைய நிலத்தை தனியார் வேலை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, அவற்றை தடுத்து நிறுத்தியதோடு நகர மன்ற கூட்டத்தில் பேருந்து நிலையம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி, சம்பந்தப்பட்ட நிலம் நகராட்சிக்கு சொந்தமானது என்பதால் அதை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது.

இதனையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு, 2021ம் ஆண்டு எனத் தொடர்ந்து, 2 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.கருணாநிதி அஸ்தினாபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து, சட்டசபையில் பேசியதோடு அங்கு பேருந்து நிலையம் கொண்டுவர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.  இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பில் நிலம் அரசுக்கு சொந்தமானது என உறுதியானதை தொடர்ந்து அந்த நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிட்டு மொத்தம் உள்ள 12,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 1750 சதுர அடியில் ஆறு பேருந்துகள் நிற்கும்படி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின் தாம்பரம் மாநகராட்சி சார்பில், பயணிகளுக்கு நவீன கழிப்பிடம் மற்றும் பயணிகளுக்கு தேவையான பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் காயத்ரி நகர், ராஜேந்திர பிரசாத் சாலை ஆகிய இடங்களில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் செலவில் பேருந்து பயணிகளுக்கான நிழற்குடை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி கருணாகரன், சரண்யா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர் கருணாகரன், சமூக ஆர்வலர் சந்தானம், நலசங்க நிர்வாகி முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Astinapuram , Land Reclamation, Ashtinapuram, New Bus Stand Work,
× RELATED அஸ்தினாபுரம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்