×

மெட்ரோ ரயில் நிலைய பணிக்காக சென்னையில் 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது: ஆய்வை தொடங்கிய சிஎம்டிஏ அதிகாரிகள்

சென்னை: போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் வகையில் இணைப்பை ஏற்படுத்த, சென்னையில் உள்ள 7 முக்கிய  சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்து, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளது.  சென்னை மாநகரில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நீல, பச்சை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக ஊதா, காவி, சிவப்பு ஆகிய வழித்தடங்களில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சேவை 2026ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உடன் போதிய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள 7 சாலைகளை விரிவாக்கம் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு பணியை சி.எம்.டி.ஏ. தொடங்கி உள்ளது. அண்ணாசாலையில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் 3 கி.மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலை 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டர் வரை அகலப்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கான நிலத்தின் திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதேபோன்று எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் ரோடு, கிரீம்ஸ் ரோடு, நியூ ஆவடி ரோடு மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 6 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலைகளை குறைந்த பட்சம் 18 மீட்டர் வரை விரிவுபடுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அடையாறு எல்.பி.ரோடு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு ஆகியவை அகலப்படுத்தும் திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.

 சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
  சர்தார் படேல் சாலை விரிவாக்கத்திற்கான நிலம் தனியாரிடம் எடுக்கும் பணி விரைவில் இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணி ஓரிரு நாளில் முடியும். எத்திராஜ் சாலை விரிவாக்க ஆய்வு பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சாலை பாந்தியன் ரோடு ஜங்சன் மற்றும் எழும்பூர் கூவம் வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்தப்படுகிறது. இதேபோன்று, கிரீம்ஸ் ரோட்டில் இருந்து பாந்தியன் ரோடு, அண்ணாசாலை வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது.

 அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்டமாக 7 சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்படும். ஈ.வே.ரா.பெரியார் சாலையில் இருந்து நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம் குடிநீர் திட்டப்பணி வரை 18 மீட்டர் அகலமும், திருவள்ளூர் ரோடு சந்திப்பில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வரை 18 மீட்டர் அகலமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அடையாறு எல்.பி. ரோடு 30.5 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chennai ,CMDA , CMDA officials started survey of metro station work, 7 major roads in Chennai
× RELATED ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர்...