×

36 மணி நேர போர் நிறுத்தம் ரஷ்யாவின் அறிவிப்பை உக்ரைன் நிராகரித்தது

கீவ்: ரஷ்யா விடுத்த இரண்டு நாள்  போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்  ஆரம்பித்து ஒரு வருடத்தை நெருங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்கள்  போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவில் பாரம்பரிய ஆர்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து 6 மற்றும் 7ம் தேதிகளில் (நேற்றும்,இன்றும்) 36 மணி நேர போர் நிறுத்தத்திற்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

ஆனால்  போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன்  அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறுகையில், ‘‘உக்ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்’’ என்றார். கூடுதல் ராணுவ உதவி: ரஷ்யா-உக்ரைன் உடனான  போர் முக்கியமான  கட்டத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜோ  பைடன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ தற்போது போர் முக்கியமான கட்டத்தை  எட்டியுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரைனுக்கு அனைத்து உதவிகளும்  செய்யப்படும். ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உடன் உக்ரைன்  விவகாரம்  குறித்து  நீண்ட ஆலோசனை நடத்தினோம். உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. தரைப்படை வாகனங்களை அமெரிக்கா அளிக்கும்.  வான் பாதுகாப்புக்கான பேட்ரியாயிட் கருவிகளை ஜெர்மனி வழங்க  உள்ளது’’ என்றார். 


Tags : Ukraine ,Russia , ceasefire, Russia's declaration, Ukraine's rejection,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...