×

 2 பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் ரவி ஆணையை வழங்கினார்

சென்னை: தமிழ்நாட்டின் 2 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை உயர் அழுத்த ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராகவும், இயக்குனராகவும் தற்போது ஆறுமுகம் பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் பணி அனுபவமும், 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவர். இதுதவிர 3 கட்டுரைகளையும், 19 சர்வதேச மற்றும் தேசிய கல்வி நிகழ்வுகளையும் நடத்தி இருக்கிறார். 220 சர்வதேச மற்றும் தேசிய ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

இவரது பணியை பாராட்டி, சென்னை அறிவியல் அகாடமி இயற்பியல் அறிவியலுக்கான மூத்த விஞ்ஞானி விருது, அப்துல்கலாம் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்நாடு மாநில கவுன்சிலின் இயற்பியல் அறிவியலுக்கான தமிழ்நாடு விஞ்ஞானி விருது உள்பட விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்துக்காக 17 வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், 34 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவமும், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக அனுபவமும் கொண்டவர். 2 புத்தகங்களை எழுதியிருப்பதோடு, 4 சர்வதேச கல்வி நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். திருச்சி மண்டல இணை இயக்குனர், நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கல்லூரி முதல்வர், கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் உள்பட பல்வேறு பொறுப்புகளை கலா வகித்துள்ளார். இவர்கள் இருவரையும் துணைவேந்தர்களாக நியமனம் செய்ததற்கான ஆணையை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாட்டின் ஆளுநருமான ஆர்.என்.ரவி வழங்கினார். அப்போது ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடனிருந்தார்.

Tags : Governor ,Ravi , Appointment of Vice-Chancellors to 2 Universities: Governor Ravi issued order
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...