×

சேலம் போலீஸ்காரர் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கொலையா என விசாரணை

சேலம்: சேலத்தில் மர்மமான முறையில் இறந்த போலீஸ்காரர் சாவில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சரணடைந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி பக்கமுள்ள கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(51). அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வந்தார். மதுபழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29ம்தேதி முதல் பணிக்கு வரவில்லை. வீட்டிற்கும் செல்லாததால் அவரது மனைவி மாலா பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் 26ம் தேதி சேலம் மாநகர துணை கமிஷனர் லாவண்யாவிடம் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து டவுன் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். மனைவி மாலாவை அழைத்து நடத்திய விசாரணையில், கணவரின் டூவீலர் மற்றும் செல்போனை அவரது நண்பர் விஜயகுமார் (எ) பஞ்சர்குமாரிடம் இருந்து மீட்டதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி சாராயம் குடிக்க செல்வார்களாம். இதற்கிடையில், போலீசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட பஞ்சர்குமார் தலைமறைவானார். பின்னர் திடீரென போலீசில் சரணடைந்தார்.  

அவரிடம் உதவி கமிஷனர் வெங்கடேஷ் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் ஜெயராமன் மர்மமான முறையில் இறந்ததும், அடையாளம் தெரியாத சடலமாக ஜெயராமனை மீட்ட காரிப்பட்டி போலீசார் உடலை அடக்கம் செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் பஞ்சர்குமாரை காரிப்பட்டி போலீசாரிடம் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேஷ் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் ஜெயராமனும், தானும் கருமந்துறை சென்று சாராயம் குடித்த தகவலை பஞ்சர்குமார் தெரிவித்தார். இதையடுத்து காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் அவரை கருமந்துறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் புதுப்புது தகவல்கள் வெளியானது.

சம்பவத்தன்று போலீஸ்காரர் ஜெயராமனும், பஞ்சர்குமாரும் டூவீலரில் கருமந்துறை சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மலைப்பகுதிக்கு சென்று 5 லிட்டர் சாராயம் கேனில் வாங்கி குடித்துள்ளனர். இவர்கள் போலீசார் என்று கூறியதால் கிராமமக்கள் அவர்களுக்கு கோழி அடித்து குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். பின்னர் சாராயத்தை எடுத்துக்கொண்டு சேலம் வரும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி குடித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக ஜெயராமன் மது குடித்ததால் அவரை மரத்தடியில் இறக்கி விட்டுவிட்டு வந்ததாக போலீசாரிடம் பஞ்சர்குமார் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் போலீஸ்காரர் இறந்துபோன தகவலை அவரது மனைவிக்கு தெரிவிக்கவில்லை. மேலும் டூவீலரையும், செல்போனையும் கொடுக்கவில்லை. செட்டிச்சாவடியில் உள்ள டாஸ்மாக்கில் வண்டி இருந்ததை பார்த்து மாலாவே கண்டுபிடித்து கேட்ட பிறகுதான், நெத்திமேட்டில் இறக்கிவிட்டதாக பொய் கூறியுள்ளார். இதனால் பஞ்சர்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால்  அவர் கொலை செய்யப்பட்டாரா போலீசார் தொடர்ந்து பஞ்சர்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chavil ,Kolayah , Sudden twist in Salem cop's mysterious death: Murder investigation
× RELATED திருக்கனூர் அருகே இளம்பெண் சாவில்...