×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடிவு..!!

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவையின் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். அதே சமயம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்ட 5 பேரை தண்டிக்க வேண்டும் என்றும் கோகுல்ராஜின் தாயார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவதியிடம் விசாரணை நடைபெற்றது. அச்சமயம் வீடியோ காட்சிகளை கொண்டு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அப்போது விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முன்னுக்கு பின் மாறி மாறி சாட்சியம் அளித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டது. மேலும் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. கர்ப்பமாக உள்ள சுவாதிக்கு பதில் அவரது கணவரிடம் குற்றச்சாட்டுக்கான மெமோவை ஐகோர்ட் வழங்கியது.

வழக்கில் கோகுல்ராஜின் தாயார், அரசு, காவல்துறை தரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு செய்தனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழியை பற்றி அறியவும் ஜனவரி 22ல் நேரில் செல்வதாக நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Tags : Chennai High Court ,Thiruchengod ,Arthanariswarar temple ,Gokulraj , Gokulraj murder, Tiruchengode Arthanareeswarar Temple, Judges
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...