2 ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: கர்நாடகாவில் என்ஐஏ அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷான் தாஜுதீன் ஷேக் மற்றும் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைர் பர்ஹான் பேக் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக கூறி அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி ஷிவமோகா போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர். அந்த வழக்கானது கடந்த நவம்பர் 15ம் தேதி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தட்சிண கன்னடா, சிவமோகா, தாவணகெரே, பெங்களூரு போன்ற இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அவர்களின் சதி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இதே வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

Related Stories: