பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு பணி மும்முரம்

க.பரமத்தி : கரூர் நொய்யல் சுற்று பகுதிகளில் பொங்கலையொட்டி உருண்டைவெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தமிழர் திருநாளான பொங்கல்விழா என்றதும் நம் நினைவிற்கு வருவது செங்கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை தான். கரும்புச்சாறில் இருந்து தயாராகும் வெல்லம் பலவித பயன்பாடு உடையது. பழங்காலத்தில் மாடுகளை பயன்படுத்தி கரும்பில் இருந்து சாற்றைப் பிழிந்து எடுத்து வெல்லம் தயாரித்தனர். ஆனால் தற்போது காலத்திற்கு ஏற்றார்போல் மின் மோட்டார், ஆயில் என்ஜின் ஆகியவற்றைக் கொண்டு சாறு எடுத்து வெல்லம் தயாரிப்பு பணி நடை பெறுகிறது. அச்சு வெல்லத்திற்கு சுவையை பக்குவம் தான் நிர்ணயிக்கிறது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் பழமாபுரம், வேலாயுதம்பாளையம், நொய்யல், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், சேமங்கி, புங்கோடை குளத்துப்பாளையம், நல்லிக்கோயில், மறவாபாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை அருகில் உள்ள கரும்பு ஆலைகளில் பதிவு செய்கின்றனர். பின்னர் குறிப்பிட்ட காலத்தில் கரும்பை அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர். கரும்பை பதிவு செய்யாத விவசாயிகள் சிலர் கரும்புகளை அறுவடை செய்து நொய்யல் குறுக்குசாலை, சோளகாளிபாளையம், வேலூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்கின்றனர். வெல்லம் தயாரிக்கும் கூடங்களில் பொங்கல் மற்றும் ஓணம்பண்டிகை முன்னிட்டு கூடுதலாக அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

இதில் முதல்ரக கரும்பாக இருந்தால் அதில் 110 கிலோ வெல்லம் அச்சு, உருண்டை வெல்லம் தயாரிக்கலாம் எனவும், ஒருநாள் ஒன்றுக்கு சுமார் 70 சிப்பம் தயாராகும் வெல்லங்களை 30 கிலோ கொண்ட மூட்டைகளாக தைக்கப்பட்டு கரூர், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள வெல்லமண்டிக்கு கொண்டுசென்று அங்கு ஏலம் விடப்படுகிறது.

வெல்லத்தை ஏலம் எடுக்க மதுரை, திருச்சி, கோவை, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் வெல்லத்தை ஏலம் எடுக்கின்றனர். இதனை நம்பி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories: