×

ஆனைமலையில் 2ம்போக நெல் சாகுபடிக்கு நாற்று நடவு பணி தீவிரம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில், இரண்டாம்போக சாகுபடிக்காக நெல் நாற்றுநடவு பணி தீவிரமாக நடக்கிறது.  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், ரமணமுதலிபுதூர், மயிலாடுதுறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக, சுமார் 6500 ஏக்கர் விவசாய நிலங்களில் இரண்டுபோக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியாரிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், கடந்த ஜூன் மாதம் இறுதியிலிருந்து  முதல்போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

 அவை நல்ல விளைச்சலடைந்ததுடன், கடந்த நவம்பர் மாதம் துவக்கத்தில் அறுவடை பணி துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை பணி நடந்துள்ளது. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தற்போதும் அவ்வப்போது தொடர்வதால், இரண்டாம் போக சாகுபடிக்காக, இந்த மாதம் துவக்கத்தில்  தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் நாற்றாங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் நாற்றாங்காலை எடுத்து, வயல்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நாற்று நடவு பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இதில், விவசாய தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தற்போது நடவு செய்யப்படும் நெல் நாற்று இன்னும் 4 மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும் என,  விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Anaimalai , Anaimalai: In Anaimalai area next to Pollachi, paddy plantation work is going on intensively for secondary cultivation.
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...