×

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டன-அழிவின் நிலையில் உள்ள மீன்கள் மீட்க நடவடிக்கை

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் சார்பில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற அழிவின் நிலையில் உள்ள மீன்களை மீட்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவிடைமருதூர் தாலுகா அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
குறிப்பாக அழிவின் நிலையில் உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் விடும் பணி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நடந்தது.

அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமை வகித்து பேசுகையில், இந்த திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டின மீன் வகைகள் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வழி வகுப்பதோடு, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள நாட்டின மீன்களை பாதுகாப்பதற்காகவும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கல்லணையில் இருந்து காவிரி, அரசலாறு தலைப்பு வரை 205 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றில் ஒரு கி.மீ. தூரத்திற்கு 2 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் என 5 லட்சத்து நாட்டின மீன் குஞ்சுகள் இதுவரை விடப்பட்டுள்ளன. என்றார்.

மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் முன்னிலை வகித்து, மீனவர்களுக்கு அடையாள அட்டை, மீன் உரம் வழங்கினார். இதில் நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் சிவக்குமார், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery ,Kollidam , Thiruvidaimarudur: Tiruvidaimarudur district dam 40 thousand fish under stocking project in Kollidam river.
× RELATED அரவக்குறிச்சியில் குழாய் உடைந்து 3 மாதமாக வீணாகும் குடிநீர்