ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் கண்மாய்கள்

*நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது

*விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் உள்ள பொம்மையசாமி மற்றும் கோடாங்கி நாயக்கர் கண்மாய்கள் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிறைந்துள்ளதால், அப்பகுதி விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கு தண்ணீர் பிரச்னை தீர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிக்குண்டு ஊராட்சி பகுதியில் வீரசின்னம்மாள்புரம், அண்ணாநகர், எம்.சுப்புலாபுரம், எரதிமக்காள்பட்டி, பழனிதேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை முக்கிய தொழில்களாக செய்து வருகின்றனர். இதனைத் தவிர்த்து வீடுகளிலும், பண்ணைகளிலும் கால்நடைகளையும் அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் கம்பு, சோளம், கேழ்வரகு, அவரை, மொச்சை, வெண்டை, கத்தரி உள்ளிட்டவை 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதி விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் இந்த ஊராட்சி பகுதியில் பொம்மையசாமி கண்மாய்,கோடாங்கி நாயக்கர் கண்மாய், கன்னிமார்குளம், மல்லையச்சேரிகுளம், இருட்டோடை கண்மாய் மற்றும் ஊருணிகள் உள்ளன. இதில் பொம்மையசாமி கண்மாய், கோடாங்கி நாயக்கர் கண்மாய் ஆகியவை மரிக்குண்டு கிராமத்திலும் மற்ற கண்மாய்கள் ஊராட்சி பகுதிகளிலும் அமைந்துள்ளன. இந்த ஆண்டு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை போதுமான அளவு கைகொடுக்கவில்லை.

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பெய்தாலும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் போதுமான அளவு தண்ணீர் தேங்கவில்லை. மரிக்குண்டு கிராமத்தில் உள்ள பொம்மையசாமி கண்மாய்க்கு மழைநீரும், மூல வைகை ஆற்றில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி தடுப்பணை மூலம் தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 50 வருடங்களாக இந்த பொம்மையசாமி கண்மாய் மற்றும் கோடாங்கி நாயக்கர் கண்மாய்கள் நிரம்பாமல் இருந்து வந்தன. இந்த கண்மாய்களுக்கு பருவமழைக்காலங்களில் அடிக்கடி நீர்வரத்து இருக்கும். ஆனாலும் இந்த நீர்வரத்து கண்மாய்களுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கண்மாயை நம்பியுள்ள விவசாய நிலங்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பல ஆண்டுகளாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு அடிக்கடி பெய்த மழையினாலும், மூல வைகை ஆற்றில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி தடுப்பணையில் இருந்து ஏற்பட்ட நீர்வரத்தாலும் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பொம்மையசாமி கண்மாயும், கோடாங்கி நாயக்கர் கண்மாயும் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதன்படி நீண்ட காலத்திற்கு பிறகு இக்கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி பொம்மையசாமி கண்மாய் நிறைந்து மறுகால் செல்வதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாய் நிறைந்து அடுத்தக்கட்டமாக பாலசமுத்திரம் கண்மாய், கோவில்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பாலசமுத்திரம் கண்மாய் மற்றும் கோவில்பட்டி கண்மாய்களை சுற்றியுள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், மரிக்குண்டு கிராமத்தில் உள்ள பொம்மையசாமி மற்றும் கோடாங்கி நாயக்கர் கண்மாயை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தோம். தற்போது இரண்டு கண்மாய்களிலும் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு முழுமையாக நிறைந்துள்ளது. இதனால் தற்போது விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் தேவையாக தண்ணீருக்கு எவ்வித பிரச்னை இல்லாமல் இருக்கிறது. மேலும் கண்மாயை தூர்வாரி தண்ணீரை ஆண்டு தோறும் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மரிக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்லமணி மகாலிங்கம் கூறும்போது, பொம்மையசாமி மற்றும் கோடாங்கி நாயக்கர் கண்மாய்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்துள்ளன. இதனால் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது கண்மாய்கள் நிறைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் கிணறுகள் உதவியுடன் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களும் பயன்பெறும் என்பதை மறுப்பதற்கில்லை என்றார்.

பார்வையிட்ட எம்எல்ஏ

மெட்டனூத்து கிராமத்தில் உள்ள பொம்மையசாமி மற்றும் கோடாங்கி நாயக்கர் கண்மாய்கள் நிறைந்துள்ள நிலையில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், அவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கண்மாய்களின் பாசன பரப்பு விபரம் குறித்து கேட்டறிந்தார். கண்மாய்க்கு வரும் தண்ணீரை தேக்கி வைத்து ஆண்டுமுழுவதும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: