×

ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டத்துடன் கோத்தர் இன மக்களின் கம்பட்ராயர் திருவிழா நிறைவு-ஐயனோர், அம்மனோர் கோவிலில் சிறப்பு வழிபாடு

குன்னூர் : கம்பட்ராயர் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று கோத்தர் இன பழங்குடியின மக்கள் ராஜ உடையணிந்து நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோத்தர்,தோடர்,இருளர்,பனியர்,காட்டு நாயக்கர்,குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியம், கலாசாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

இயற்கையின் படைப்பில் விவசாயம் மற்றும் எருதுகள் மேய்ப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையாகும்.தற்போது சமகாலத்தில்  கல்வி, பொருளாதாரம் என மேம்பட்டாலும் தங்களது பாரம்பரியத்தை கைவிடாது வாழ்ந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உட்பட பலவேறு இடங்களில்  கோத்தர் இன மக்கள் ஐயனோர், அம்மனோர் தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வணங்கி வருகின்றனர். அவர்கள் ஐயனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

இதனை”கம்பட்ராயர் திருவிழா” என்றும் அழைக்கின்றனர். வெளி ஆட்களை தங்களது புனித இடத்திற்கு அனுமதிப்பதில்லை. வெண்ணிற ஆடை அணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் திருவிழாவை வெகு உற்சாகமாக கொண்டாடினர்.கோத்தர் இன மக்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் கடந்த வாரம் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை தொடங்கியது. முதல் நாளில் ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும் கோவிலில் காணிக்கைகள் செலுத்தி வழிபாடுகள் நடத்தினர். தினமும் மாலை 6 மணிக்கு துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடக்கும் விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.பண்டிகையின் நிறைவு நாளான நேற்று ஐயனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. அமாவாசை முடிந்து வளர்பிறை தொடங்கும் திங்கட்கிழமை அன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தபண்டிகையின் 9-வது நாளான நேற்று கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர்.கோத்தர் இன ஆண்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகளை இசைக்க துவங்கினர். பராம்பரிய உடையணிந்த ஆண்கள் வட்டமிட்டு நடனமாட துவங்கினர். அடுத்து பெண்களும் பாரம்பரிய உடையணிந்து  இசை கருவிகளை இசைத்து நடனம் ஆடி வழிபட்டனர். அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து வந்தனர். அப்போது 5 பேர் தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனமாடினர்.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு இயற்கை துணை புரிய வேண்டி இந்த திருவிழா நடைபெறுவதாக கோத்தர் இன மக்கள் தெரிவித்தனர்.  இதில் சுற்றுவட்டார கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Kambatrayar festival ,Atam ,Batam ,Iyanor ,Ammanor , Coonoor: On the concluding day of the Kambatrayar festival, the people of the Kothar tribe dressed up as kings and danced and enjoyed themselves. Nilgiris
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது