
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி படி ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 507 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 தொகுதிகளிலும் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை 1.1.2023ஐ தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் பெயர் சேர்ப்பிற்கு 6721 விண்ணப்பங்களும், நீக்கத்திற்கு 8566 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு மற்றும் நீக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலின் படி நீலகிரியில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 95 ஆயிரத்து 281 ஆண்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 811 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என 1 லட்சத்து 99 ஆயிரத்து 102 ேபர் இடம் பெற்றுள்ளனர். கூடலூர் தொகுதியில் 92 ஆயிரத்து 995 ஆண்கள், 97 ஆயிரத்து 960 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னூர் தொகுதியில் 90 ஆயிரத்து 432 ஆண்கள், 1 லட்சத்து 12 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 என ெமாத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 448 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று தொகுதியிலும் சேர்த்து 2 லட்சத்து 78 ஆயிரத்து 708 ஆண்கள், 3 லட்சத்து ஆயிரத்து 783 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் 1123 ஆண்கள், 725 பெண்கள் என 1845 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி பட்டியல் படி 18-19 வயதுள்ள புதிய வாக்காளர்கள் 4,977 பேரும், 19 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 5 லட்சத்து 75 ஆயிரத்து 530 பேரும் உள்ளனர். பாலின விகித அடிப்படையில் மூன்று தொகுதிகளிலும் சராசரியாக 1000 ஆண் வாக்காளர்களுக்கு 1083 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், இறுதி பட்டியல் படி நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 507 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர், என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆர்டிஒ.,க்கள் துரைசாமி, பூசணகுமார், முகமது குதுரத்துல்லா, தேர்தல் வட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகம் மற்றும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் விவரம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் (தனி) மற்றும் குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஊட்டி தொகுதியில் 138 இடங்களில் என 239 வாக்குச்சாவடிகள் உள்ளன. கூடலூர் தொகுதியில் 99 இடங்களில் 222 வாக்குச்சாவடிகளும், குன்னூர் தொகுதியில் 132 இடங்களில் 225 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 686 வாக்குசாவடிகள் உள்ளன. அதிக வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் 3 தொகுதிகளிலும் உள்ளன.
ஊட்டி தொகுதியில் கோடப்பந்து நகராட்சி உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் 1472 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர் தொகுதியில் ஓவேலி சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளி பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 1502 வாக்காளர் உள்ளனர். குன்னூர் தொகுதியில் மவுண்ட் பிளசாண்ட், மின்வாரிய அலுவலக வாக்குச்சாவடியில் 1405 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல் குறைந்த வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் விவரம்: ஊட்டி தொகுதியில் குந்தா லோயர் கேம்ப் பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி வாக்குசாவடியில் 101 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர் தொகுதியில் சிங்காரா கேம்ப் பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி வாக்குசாவடியில் 106 வாக்காளர்கள் உள்ளனர். குன்னூர் தொகுதியில் பில்லூர் மட்டம் சிஎஸ்ஐ., தொடக்க பள்ளி வாக்குச்சாவடியில் 172 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.