×

புளியங்குடி பகுதியில் தோட்டத்தில் பதுக்கிவைத்து ஊர்ஊராக கஞ்சா விற்ற 6 பேர் கைது-ஆட்டோ, 4 பைக்குகள் பறிமுதல்

புளியங்குடி :  புளியங்குடி பகுதியில் தோட்டத்தில் பதுக்கிவைத்து ஊர்ஊராக கஞ்சா விற்ற 6 பேர் கும்பலை கைதுசெய்த தனிப்படை போலீசார், கும்பலிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.1.41 லட்சம், ஆட்டோ, 4 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பான்பராக், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது போலீசார் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் தென்காசி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. செல்வமாணிக்கம் ஆகியோர் தலைமையில் காவலர்கள் பால்ராஜ், முருகேசன்,ராம்குமார், தனிப்பிரிவு காவலர் மருதுபாண்டி ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் புளியங்குடி அருகே தம்பிரான்குளம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 பேர் கும்பலை தனிப்படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது கும்பலைச் சேர்ந்த 4 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இவர்கள் புளியங்குடி புன்னையாபுரத்தைச் சேர்ந்த குத்தாலிங்கம் மகன் திருப்பதி (48), புளியங்குடியைச் சேர்ந்த மருதுபாண்டி(24), கிருபாகரன்(28), விக்னேஷ் (20), வாசுதேவநல்லூர் அருகே உள்ளாறு பகுதியைச் சேர்ந்த காசிதுரை என்ற கார்த்திக் (22), கடையநல்லூர் அருகே கம்பனேரியைச் சேர்ந்த ராஜேஷ் (22) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கிவைத்து ஊர்ஊராக வாகனங்களில் கொண்டுசென்று விற்று வந்ததும் அம்பலமானது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், கும்பலிடம் இருந்து 2 கிலோ கஞ்சா,  ஆட்டோ, 4 பைக்குகள், 2 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 கிலோ கஞ்சா ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை

கைதான கும்பலிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பதி மற்றும் அவரது கூட்டாளிகள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை  ஒரு கிலோ ரூ.30 ஆயிரம் என்ற விலையில் வாங்கி கடத்திவந்து புளியங்குடியில் உள்ள திருப்பதிக்கு சொந்தமான தோட்டத்தில் பதுக்கிவைத்து பின்னர் இங்கிருந்து பைக் மற்றும் ஆட்டோக்களில் கொண்டு சென்று புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கிலோ ரூ.1.50 லட்சம் என அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



Tags : Buliangudi , Puliangudi: Special police arrested a gang of 6 people who stashed ganja in the garden and sold it locally, and 2 from the gang were arrested.
× RELATED புளியங்குடியில் கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பரிதாப பலி