×

மேலவல்லம் கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம அருகே மேலவல்லம் கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மேலவல்லம் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழில் மற்றும் மழைக்காலங்களில் பொங்கல் விழாவிற்கு என்று நெட்டித்தக்கை மாலை செய்யும் பணியில் இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் ஆண், பெண் முதியவர்கள் வரை ஈடுபட்டு வருகின்றனர்.

இங்குள்ள அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தில் பல மாதங்கள் வேலை இல்லாமல் இருந்து பின்னர் அவ்வப்போது கிடைக்கும் விவசாய தொழிலில் ஈடுபட்டு அவர்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் காலம் காலமாக குடிசைகளில் வசித்து வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை குடிசை வீட்டில் மேல் கூரை பழுதாகி விடுவதால் வீடு மழைக்காலங்களில் மேற்கூறையின் வழியே உள்ளே வந்து விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் உறங்கும்போது கூட நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். குடிசை வீடுகளில் மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டு உள்ளது.

மேற்கூரைக்கான கீற்றுகளை வாங்குவதற்கு கூட வசதி இல்லாத நிலையில் மேற்கூறையில் பிளாஸ்டிக் பாயை போட்டு வீட்டை பாதுகாத்து வருகின்றனர். இப்படி காலம் முழுமையும் கீற்று குடிசைகளில் வாழ்ந்து வரும் இவர்கள் வறுமையில் வாழ்ந்து வருவதால் சொந்தமாக அரசின் கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள கான்கிரீட் வீடுகளை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கட்ட துவங்கி வருகின்றனர். அதுவும் சிலருக்கு மட்டும் அரசின் கான்கிரீட் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பல வருடங்கள் கழித்து தற்போது சில வீடுகள் மட்டும் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 90 சதவீத குடும்பங்களுக்கு இதுவரை அரசின் கான்கிரீட் வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இதுகுறித்து மேலவல்லம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி மோகன் கூறுகையில், நாங்கள் காலம் காலமாக இங்கு குடிசை வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஒருமுறை மேற்கூரை கீற்று கட்டினால் மீண்டும் இரண்டு அல்லது மூன்றாவது வருடத்திற்குள் தென்னங்கீற்றுகள் சேதம் அடைந்து விடுவதால் மழைக்காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இங்குள்ளவர்கள் அனைவரும் தொழிலாளியாக இருந்து வருவதால் வீட்டின் கூரையை கூட கட்டிக்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறோம். இந்நிலையில் மேலவலம் கிராமத்தில் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மட்டும் அரசின் கான்கிரீட் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதையும் பயனாளிகள் சொந்தமாக கட்டி கொள்ள முடியாததால் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் வீடுகளை கட்டிக் கொடுக்க பயன்படுத்தி வருகிறோம்.

பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் அரசின் கான்கிரீட் வீடு எங்கள் கிராமத்துக்கு கட்டி கொடுக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரே நேரத்தில் அரசின் கான்கிரீட் வீடு ஒதுக்கீடு செய்து கூடுதல் தொகையை ஒதுக்கி அரசே வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Melavallam , Kollidama: People demand that concrete houses should be built instead of huts in Melavallam village near Kollidama
× RELATED கொள்ளிடம் அருகே மயானத்துக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்