×

அம்மை நோய் தாக்குவதால் கால்நடைகளுக்கான பொங்கல் கயிறு விற்பனை மந்தம்-வியாபாரிகள் வேதனை

சத்தியமங்கலம் :   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 2வது பெரிய சந்தையாகும். இங்கு வாரநாட்களில் புதன்கிழமை மாட்டுச்சந்தையும், வியாழனன்று பொதுசந்தையும் கூடுகிறது.

இச்சந்தைக்கு புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மாட்டுப்பொங்கலன்று விவசாயிகள் வைத்துள்ள உழவு மாடு, கறவை மாடு, எருமை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பழைய கயிறுகளை அகற்றிவிட்டு புதிய கயிறுகள் கட்டி அழகுபடுத்தி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகள் மற்றும் கழுத்திற்கு கட்டப்படும் மணிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கால்நடைகளுக்கு தற்போது அம்மை நோய் தாக்குவதால் நோய் தாக்கிய கால்நடைகளுக்கு பழைய கயிறுகளுக்கு பதிலாக புதிய கயிறுகளை மாற்றுவதற்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், பொங்கல் பண்டிகை நெருங்கியும் கயிறு விற்பனை மந்தமாக உள்ளதாக கயிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புஞ்சைபுளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகளுக்கான கயிறுகளின் விலை நிலவரம்: தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.80-100 கழுத்துக்கயிறு ரூ.40-80 மூக்கணாங்கயிறு ரூ.40-60, தாம்புக்கயிறு ரூ.50-80 கொம்புகயிறு ரூ.40-60, சங்கு கயிறு ரூ.40க்கும் விற்கப்பட்டது. இதுதவிர,ஆடு, மாடுகளுக்கு, பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட, திருகாணி ரூ.25க்கும், மணி ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Sathyamangalam: On the occasion of Pongal festival, Erode District Punjaipuliyampatti weekly market sells ropes for cattle.
× RELATED அனுமதியின்றி கார்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூல் என புகார்..!!