×

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைந்து 32 வகையான அபிஷேகம்

சாயல்குடி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருஉத்தரகோசமங்கையில் ஒற்றைக்கல்லால் ஆன மரகத நடராஜருக்கு சாத்தப்பட்டிருந்த சந்தனக்காப்பு நேற்று காலை களையப்பட்டு 32 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற சிவன்கோயிலான மங்களேஸ்வரி அம்மன் உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு தினந்தோறும் அபிஷேகம், பூஜைகள் செய்ய முடியாது என்பதற்காக வருடத்தில் 364 நாட்கள் சிறிய வடிவிலான ஸ்படிக லிங்கத்திற்கும், மரகத லிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கும்.

கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா திருவிழா துவங்கப்பட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் மகாராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் சார்பாக அவரது குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பாஞ்சலி பூஜைகள் செய்யப்பட்டு, திருநடை திறக்கப்பட்டது. பிறகு திருவாசகம், சிவப்புராணம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, சந்தனம் களையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடராஜர் சிலைக்கு பால், மஞ்சள், சந்தனம், விபூதி, திருமஞ்சனம், நெல்லி பொடி, பழம் வகைகள், பஞ்சாமிர்தம், தாழம்பூ உள்ளிட்ட மலர் வகைள் உள்ளிட்ட 32 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

பிறகு மூலிகை திரவியங்கள் பூசப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10 மணிக்கு மூலவர் கூத்தர் கல் மண்டபத்தில் எழுந்தருளுதல், 10.30 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடு அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். இன்று அதிகாலை ஒரு மணிக்கு திருநடை அடைக்கப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல், 4 மணிக்கு ஆருத்ரா, மகா தீபாராதனை நடந்தது. சந்தனம் பூசப்பட்ட நிலையில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், மாணிக்கவாசகருக்கு காட்சியளித்து சுவாமி புறப்பாடு, வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு ஊர்வலம் நடத்தப்பட்டு இரவு நடை சாத்தப்படும். விழா ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்திருந்தது. ராமநாதபுரம் எஸ்பி தங்கத்துரை தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Thiruuttaragosamangai , Arudra darshan at Thiruuttarakosamangai 32 types of abhishekam for Emerald Nataraja
× RELATED திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா தேரோட்டம்