×

தமிழக பாஜவின் மாநில தலைவராக கவர்னர் ரவி செயல்பட வேண்டாம்: டி.ஆர். பாலு கடும் கண்டனம்

சென்னை: தமிழக பாஜவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜ மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ‘திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு திமுக எம்.பி, டி.ஆர் பாலு ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி டி.ஆர். பாலு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேசினார்.

வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். பாஜவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

இவருக்குத் தமிழ்நாடு பாஜ தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட - அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது. அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது.காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம்.

தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம். தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜவிற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பாஜ தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Governor Ravi ,Tamil Nadu Baja ,D. R.R. Palu , Tamil Nadu BJP, State President Governor Ravi, DR. Balu strongly condemned
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...