×

நீலகிரியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வளர்ப்பு பன்றி விற்பனைக்கு தடை: கலெக்டர் எச்சரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன்  பன்றி காய்ச்சல் தாக்கம் குறையும் வரை, தங்கள் வளர்க்கும் பன்றிகளை  விற்பனைக்காக வெளியில் எடுத்து செல்லக்கூடாது. மீறினால் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீலகிரி கலெக்டர் அம்ரித் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெப்பக்காடு வரவேற்பு மையம் அருகில் காட்டுப்பன்றிகள் அதிகளவு இறந்துள்ளன.

அதனை பிரேத பரிசோதனை செய்து இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைத்ததில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் 10 கிமீ சுற்றுப்புறத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் அந்த பகுதி கால்நடை மருத்துவக்குழு சோதனை மேற்கொண்டதில் இதுவரை வளர்ப்பு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ, இறப்புகளோ இல்லை என தெரியவந்துள்ளது.

பண்ணை உரிமையாளர்கள் தங்கள் வளர்க்கும் பன்றிகளை இந்நோயின் தாக்கம் குறையும் வரை விற்பனைக்காக வெளியில் எடுத்து செல்லக்கூடாது. மீறினால் அவர்கள் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இந்நோயானது பன்றிகளை மட்டுமே தாக்கக்கூடியது. மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது. எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Nilgiris , Nilgiris, African swine fever, ban on sale of farmed pigs,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...