திருமகன் ஈவெரா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் முத்துசாமி உட்பட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியாரின்  கொள்ளுப்பேரனும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ  திருமகன் ஈவெரா. இவர், நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  

அவரது உடல் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக சட்டமன்ற  சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், காங்கிரஸ் கட்சியின் தேசிய  பொதுசெயலாளர் தினேஷ்குண்டு ராவ், காங்கிரஸ் மாநில தலைவர்  கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,  திருநாவுக்கரசு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,  சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம், திருப்பூர் எம்.பி. சுப்பராயன், கரூர்  எம்.பி. ஜோதிமணி, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், பாஜ தேசிய செயற்குழு  உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி  ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டு திருமகன் ஈவெரா எம்எல்ஏ உடலுக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

  இதைத்தொடர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம்  காவிரிக்கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்வதற்காக மதியம்  12.15 மணியளவில் திருமகன் ஈவெரா உடல் ஆம்புலன்ஸ்  வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில், ஈவிகேஸ் இளங்கோவன், அவருடைய மனைவி வரலட்சுமி இளங்கோவன்  மற்றும் குடும்பத்தினர், அமைச்சர் முத்துசாமி, காங்கிரஸ் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட  உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  பின்னர், மயானத்தில் சடங்குகள் ஏதுமின்றி மதியம் சுமார் 2.05  மணியளவில் திருமகன் ஈவெரா எம்எல்ஏவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: