×

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விபத்து, உயிரிழப்புகளை தடுக்க விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர், சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, ‘‘தென்மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த நேரம் மது விற்கப்படுகிறது.
 
கொரோனா காலத்தில் மது விற்காததால், அண்டை மாநிலங்களுக்கு சென்று அதிகளவில் மதுபானங்கள் வாங்கப்பட்டது. இதற்காக பல வழக்குகள் பதியப்பட்டன. மதுப்பிரியர்கள் மாற்றுவழியையே  யோசிக்கின்றனர். மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தினால் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துவிடும். தேவையில்லாத பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை இல்லை. மீறும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விழிப்புணர்வுக்காக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் மது அருந்துவதால் ஆண்டுக்கு சராசரியாக 3 மில்லியன் பேர் மரணம் அடைகின்றனர். மது விற்பனை அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த கொள்கை என்பது குடிமக்களின் நலன் சார்ந்து இருக்க வேண்டும். எதிர்காலத்தில் படிப்படியாக என்ற நிலையில் இருந்து முழுமையான மதுவிலக்கு என்ற நிலைக்கு வர வேண்டும். 16 மணிநேரம் நடந்த விற்பனை, தற்போது 10 மணி நேரமாக  குறைக்கப்பட்டதாகவும், 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை இல்லையென சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  அரசு தரப்பில் கூறப்படுகிறது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மது தீமையை ஏற்படுத்துவதுடன் சமூகத்தின் உள்கட்டமைப்பையே பாதிக்கிறது. குறிப்பாக அந்த குடும்பத்தை கடுமையாக பாதிக்கிறது. உடல்நலன் மட்டுமின்றி, மனநல பிரச்னைக்கும் காரணமாகிறது. இளைய வயதினர் அவர்களது சட்டப்பூர்வ வயது வரையில் கூட காத்திருப்பதில்லை. இது சமூகத்திற்கு பெரும் தீங்கானது. அதேநேரம் அரசின் கொள்கை முடிவில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்திய தயாரிப்பான வெளிநாட்டு மதுபானங்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் உபயோகிப்பது உள்ளிட்டவைக்கு உரிமம் வழங்கும் முறையை கொண்டு வரலாம்.

இந்த வகை மதுபானங்களை உரிய உரிமம் ெபற்றவர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி முத்திரைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் மற்றும் புகார்கள் குறித்த விபரங்களை தமிழில் அச்சிட வேண்டும். நிர்வாக விதிகளை முறையான பின்பற்றுவதையும், 21 வயதிற்கு கீழானோருக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையாக குறைக்க பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Tasmac ,ICourt , Sale of TASMAC, high Court Branch Order,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை