4 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மதிய உணவில் சிக்கன், பழங்கள்: மேற்கு வங்க அரசு அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் சிக்கன் மற்றும் பழ வகைகளை கூடுதலாக சேர்ப்பதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி  அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மதிய உணவில் அரிசி, தானிய வகைகள், காய்கறிகள், சோயாபீன்ஸ் மற்றும் முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூடுதலாக சிக்கன், பழங்களை சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு முறை இவை வழங்கப்படும். கூடுதல் ஊட்டச்சத்து திட்டத்துக்காக ரூ.371 கோடியை ஒதுக்குவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக ஜனவரி முதல் 4 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்காக வாரத்திற்கு ரூ.20 செலவு செய்யப்படும் என்றும் 16 வாரங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக சேர்க்கப்பட்ட சிக்கன், பழங்கள் உள்ளிட்டவை வழங்குவது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில், இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மம்தா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories: