×

தலைமை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் துவக்கம்

புதுடெல்லி: டெல்லியில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் மாநாட்டில் தமிழகத்தின் சார்பாக, தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும்  அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களின் இரண்டாவது தேசிய மாநாடு  நேற்று தொடங்கியது. இந்த கூட்டம்  மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நிதி ஆயோக் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில்,  அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், சிறு குறு தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் 2வது மற்றும் 3ம் நாளான, அதாவது இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் பிரதமர்  மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.  

வரும் 2047ம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வளர்ச்சி உள்ளடக்கிய மனித மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், சிறு குறு தொழில்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளது.

Tags : Chief Secretaries ,Conference ,Delhi , The Chief Secretaries' Conference begins in Delhi
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...