×

அரசியலில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா ஓய்வு

பெங்களூரு: அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பாஜ மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு 90 வயதாகிறது. இந்த வயதில் 50 வயதை போல் செயல்படமுடியாது. அதனால் பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் முழுமையாக விலகவில்லை. கட்சி தலைவர்களுக்கு அவசியமென்றால் ஆலோசனை வழங்குவேன்.

இடஒதுக்கீடு, பழைய மைசூருவில் கட்சியை பலப்படுத்தல் தொடர்பாக ஆலோசனை கேட்டால் வழங்குவேன். பாஜ என்னை புறக்கணிக்கவில்லை. மைசூரு-பெங்களூரு பத்துவழி சாலைக்கு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயர் வைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்’ என்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜவில் இணைந்த பிறகு முக்கியத்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மண்டியாவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது மரியாதை நிமித்தமாக கூட எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : SM Krishna , Politics, SM Krishna, Retd
× RELATED கர்நாடக மாநிலம் மைசூரில் உலக...