×

திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலையில் டிரோன் மூலம் வீடியோ எடுத்த ரஷ்யநாட்டு பயணிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலை மீது அனுமதியின்றி ஏறி டிரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்த ரஷ்யநாட்டு பயணிக்கு, வனத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று 2,668 அடி உயர மலையில் தீபம் ஏற்றும் மலை இறைவனின் திருமேனியாக வணங்கப்படுகிறது. எனவே, தீப விழா நாளைத்தவிர மற்ற நாட்களில் மலைமீது பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. மேலும் மலை மீது செல்ல தடை குறித்தும், தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீபமலை உச்சியில் நேற்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றிருப்பது குறித்து திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் சீனுவாசன் தலைமையில், வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு பெண் உள்பட 3 பேர் அதிநவீன காமிரா பொருத்தப்பட்ட டிரோன் பறக்கவிட்டு, மலை உச்சியில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடந்த விசாரணையில், 3 பேரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பதும், அவர்களில் டிரோன் பறக்கவிட்டவர் மென்பொருள் பொறியாளர் சர்ஜி(27) என்பதும் தெரியவந்தது.

மேலும் திருவண்ணாமலை தீபம் குறித்து இணையத்தில் பார்த்து வியந்ததாகவும், அதனால் நேரில் வந்து பார்க்க விரும்பியதோடு, அதனை வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும் அந்த வாலிபர் தெரிவித்தனர். டிரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதால் 3பேரையும் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் வீடியோ எடுத்த நபரிடம் இருந்து ரூ.25ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


Tags : Tiruvannamalai ,Deepamalai , Russian tourist fined Rs 25,000 for breaking Tiruvannamalai ban and taking drone video at Deepamalai
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...