பாலியல் சல்லாபத்தில் சிக்கிய தலைகள் மத்தியபிரதேச தேர்தலுக்கு ரிலீசாகும் ‘ஹனி ட்ராப்’:ஆளும் பாஜக தலைவர்கள் கிலி

போபால்: மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சியினரின் ‘ஹனி ட்ராப்பிங்’ வீடியோக்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியது பாஜகவினர் இடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஹனி ட்ராப்பிங்’ என்ற வார்த்தை தற்போது அரசியல்வாதிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனிப்பட்ட அல்லது அரசியல் (உளவு உட்பட) அல்லது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக பெண்களை பயன்படுத்தி வலையில் விழவைக்கும் முறையை தான் ‘ஹனிடிராப்’ என்கின்றனர்.

பின்னர் ‘ஹனி டிராப்பிங்’ மூலம் கிடைக்கும் வீடியோ அல்லது புகைப்பட ஆதாரங்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆதாயம் அடைவார்கள் அல்லது பொதுவெளியில் ரகசியங்களை வெளியிட்டு அம்பலப்படுத்துவார்கள். இதற்காக ஒரு டீமை வைத்து பாலியல் சல்லாபத்தில் சிக்கிய நபர்களை ஒருவழியாக்கி விடுவார்கள். இதுபோன்ற ‘ஹனி டிராப்’ ரகசியங்கள் வெளியாகி, பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ‘ஹனி ட்ராப்பிங்’ விவகாரம் பூதாகரமாகி வருகிறது. தேர்தல் வெற்றிக்காக, ஆளும் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் ‘ஹனி ட்ராப்பிங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன. முன்னாள் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது பாஜக தலைவர்கள் தொடர்பான செக்ஸ் சிடிக்கள் மற்றும் பென் டிரைவ்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏவான எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறுகையில், ‘என்னிடம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் செக்ஸ் சிடிக்கள் உள்ளன. என்னுடைய வீட்டிற்கு வந்தால் அந்த  செக்ஸ் சிடிக்களை போட்டு காட்டுகிறேன்’ என்றார். இவரது பேச்சு ஆளும் பாஜக தரப்பில் கிலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேர்தலில் ‘ஹனி ட்ராப்பிங்’ விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்கிடையில், பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் லோகேந்திர பராசர் கூறுகையில், ‘காங்கிரஸுக்குள் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஆபாச வீடியோக்களை வைத்திருந்தால் அதனை கோவிந்த் சிங் வெளியிடலாம். இதுபோன்ற சிடிக்களை மறைத்து வைத்திருப்பதாக கூறும் அவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: